மயிலாடுதுறை: தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து மயிலாடுதுறையில் நேற்று(நவ.14) இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கு நாளை(நவ.15) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் இன்றைய(நவ.14) மழை நிலவரம்: காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை, மயிலாடுதுறை 39 மி.மீ மழையும், மணல்மேடு 27மி.மீ மழையும், சீர்காழி 45.60 மி.மீ மழையும், கொள்ளிடம் 48.40 மி.மீ மழையும், தரங்கம்பாடி 40.10மி.மீ மழையும், செம்பனார்கோவில் 59.80 மி.மீ மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 43.32மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கனமழைக் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலை ராதாநல்லூர் பகுதியில் சாலை ஓரம் இருந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று அருகிலிருந்த மின் கம்பத்தில் வேறோடு சாய்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது பொதுமக்கள் யாரும் அருகே இல்லாததால் எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூன்று தலைமுறையாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மரம் மழைக்கு சாய்ந்ததையடுத்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் பல்லவராயன்பேட்டை பகுதியில், சாலை ஓரம் இருந்த 75 ஆண்டு பழமையான புளியமரம் ஒன்று வேறோடு சாய்ந்து சாலையோரம் அருகிலிருந்த மின் கம்பத்தில் விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்ததோடு, மின்கம்பமும் முறிந்து சாலையில் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியிலும் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, அகற்றும் பணி நிறைவடையும் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது அந்த இருப்பகுதியிலும் கிழே விழுந்த மரங்களை அகற்றும் பணி நிறைவுபெற்ற நிலையில், போக்குவரத்து சீரடைந்தது. தொடர்ந்து மின் கம்பம் விழுந்த நிலையில், மின்வாரிய ஊழியர்கள் சீரிய முயற்சியில் ஈடுபட்டு புதிய மின்கம்பம் வைத்து மீண்டும் மின் இணைப்பை வழங்கினர்.
இதையும் படிங்க: "அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்காதீர்கள்" - குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் உதயநிதி அட்வைஸ்!