மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில், 90 வயது மூதாட்டி ஒருவர் தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு மனு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த தாவூத்பீவி(90) என்ற மூதாட்டி, சொத்தைப் பிடுங்கிக்கொண்டு மகன்கள் தன்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும், தனக்குச் சொந்தமான வீட்டினை மீட்டுத்தந்தால், அதனை விற்று அந்தப் பணத்தில் தனது இறுதிக்காலத்தை கழித்துக்கொள்வதாகவும் தெரிவித்து மனுவினை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக விசாரணை செய்து வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தர உத்தரவிட்டார். இதுதொடர்பாக பேசிய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி , மூதாட்டியின் மகன்களை விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளோம். அதுவரை இளையமகன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு பேசியுள்ளோம் என்றார்.
ஓரிருநாள்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சக்கர நாற்காலியில் எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர் - பெற்றோர்கள் பாராட்டு