கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திணறிவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொண்டன. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்ல விருப்பம் தெரிவித்த 30 நபர்களை, அவர்களின் குடும்பத்துடன் அனுப்பி வைக்க ஈரோடு வட்டாட்சியர் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, சொந்த ஊருக்குச் செல்ல தயாரான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ்களுடன் தனியார் பேருந்து மூலம் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ராஜஸ்தான் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் ஆகிய பகுதிகளில் 75 பிகார் மாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இவர்களை அந்தந்த பகுதிகளிலேயே தங்க வைத்து வருவாய்த் துறையினர் பராமரித்து வந்தனர். மத்திய அரசு, ஊரடங்கில் தளர்வு அறிவித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்துகளுக்கு தொடங்கியது முன்பதிவு