நாகப்பட்டினம்: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்து வருவதால் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
திடீர் காற்றோடு மழை பொழிய கூடிய வானிலையின் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிவர் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி வருவதால், நாகை காரைக்காலில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்காரணமாக நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 64 மீனவ கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்களின் படகுகள் அனைத்தும் துறைமுகம், கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக கயிறு கட்டி நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.