நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 12ஆம் தேதி, 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் மார்ச் 16ஆம் தேதி சென்னைக்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள், அரசு தடை செய்த அதிவேக சீன இஞ்சின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகில் மீன் பிடிப்பதாகக் கூறி 11 நாகை மீனவர்களையும் படகுடன் சிறைப்பிடித்துச் சென்றனர்.
தகவலறிந்து காசிமேடு சென்ற அக்கரைப்பேட்டை மக்களிடம் சிறைப்பிடித்த 11 மீனவர்களை மட்டும் ஒப்படைத்த காசிமேடு மீனவர்கள் அவர்களது பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை ஒப்படைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயரை சந்தித்து மீனவர்கள் தங்கள் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
அதில், ”தமிழ்நாடு அரசின் மீன்பிடி சட்டவிதிகளுக்குட்பட்டு 240 HP திறன் கொண்ட இஞ்சின்கள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு மட்டுமே நாங்கள் மீன் பிடித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட வலைகளையோ, படகுகளையோ நாங்கள் பயன்படுத்துவதில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லையா என்று கேட்டு நாகை மாவட்ட மீனவர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டதில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு!