தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்களை அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது, கரோனா. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ, என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழாமல் இல்லை. இதில் நாட்டுப்புறக் கலைஞர்களும் விதிவிலக்கில்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தாரை தப்பட்டை, பறையாட்டம், கரகாட்டம் என ஏற்கெனவே அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரியக் கலையை, தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது இவர்கள்தான்.
சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் என அனைத்தையும் களைகட்ட வைக்கும் இவர்களின் வாழ்க்கை, தற்போது களையிழந்து காணப்படுகிறது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளிலும் குறைவான ஆட்களே பங்கேற்க அரசு அனுமதித்துள்ளதால், வருமானமின்றி இவர்கள் தவிக்கின்றனர்.
கோயில் திருவிழாக்களும் அடுத்து ஒரு ஆண்டிற்கு ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால், ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் தொழில் நடத்த முடியுமா என்ற எதிர்காலம் குறித்த அச்சம், இவர்களை வாட்டி வதைக்கிறது.
நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லும் வகையில், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டு, உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு?