நாகப்பட்டினத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறை கோட்டத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் கடந்த வாரம் அடைக்கப்பட்டன.
ஏற்கனவே மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகாலமாக மக்கள் போராடிவரும் நிலையில், மருத்துவக் கல்லூரியை நாகையில் அமைக்காமல் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை கோட்ட பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மிகவும் பின்தங்கிய மக்களுக்கு மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான மயிலாடுதுறை வருவாய் மண்டலத்திலுள்ள நிடூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க உத்தரவிடக் கோரி திமுகவைச் சேர்ந்த குத்தாலம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு டிசம்பர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்தச் சூழலில், இது குறித்து நாகையில் இன்று வர்த்தக சங்கத்தினரும் பல்வேறு அமைப்பு, கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் முழு கடையடைப்பு, மீனவர்கள் வேலை நிறுத்தம், தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக முடிவெடுத்தனர்.
மேலும் நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்லவுள்ளதாகவும் வர்த்தக தொழிற்குழும கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறையில் அமைய வேண்டும் என்று நான்கு தாலுகாக்களைச் சேர்ந்த மக்கள் போராடிவரும் நிலையில், நாகை பகுதியினரின் இந்த அறிவிப்பு, நாகையா? மயிலாடுதுறையா? என்ற போட்டாபோட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை!