மயிலாடுதுறை தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாறில் பேருந்து நிலையம் அருகே வாரச்சந்தை உள்ளது. இந்தச் சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் காய்கனிகள், மளிகை பொருட்கள், மலர்ச்செடிகள், சிப்ஸ் நாட்டுக்கோழி, கருவாடு போன்றவையும், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளைவித்த கத்தரிக்காய், கொத்தவரங்காய், முள்ளங்கி, அவரைக்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் விற்பனை செய்து வந்தனர்.
இந்த சந்தைக்கு தரங்கம்பாடி, பொறையாறு எருக்கட்டாஞ்சேரி, காட்டுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, பூவம் ஆகிய சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுபடி கடந்த மார்ச் மாதம் வாரசந்தை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. ஆனால் தொடர்ந்து பொறையாறு வாரச்சந்தை திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவுப்படி, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாஹீன் அபுபக்கர் அறிவுறுத்தலின்படியும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் துரித நடவடிக்கை எடுத்து வாரச்சந்தையை மீண்டும் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வாரச்சந்தையில் பொருட்களை வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க:
பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21 சதவிகிதமாக உயர்த்துக! - ரவிகுமார் எம்.பி