புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நெடுங்காடிலிருந்து பொறையாறு வழியாக மயிலாடுதுறைக்கு காரில் சாராயம் கடத்திச் செல்லப்படுவதாக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
அதில், பஞ்சரான ஒரு காரின் டயரை சரி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் துறையினர் வருவதை கண்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் கார்களை சோதனையிட்டதில் ஒரு காரில் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐயாயிரம் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த காரின் டயர் பஞ்சர் ஆனதால் அதனை சரிசெய்ய மற்றொரு காருடன் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அதனை சரிசெய்யும் போது காவல் துறையினர் வந்ததால் தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராய பாக்கெட்டுகள், இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் வளாகத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை!