தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் ராஜேஷ்தாஸ் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி காவல் நிலையங்களில் பெறப்படும் பொதுமக்களின் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது நேரடியாக புகார்தாரர்கள் வீட்டிற்கே சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் புகாருக்கு விரைவாக செயல்பட்டு உடனுக்குடன் தீர்வு காணும் இந்த நடைமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறையில் இதுவரை 78 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.