நாகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசு கலந்துகொண்டார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ’மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய இந்தியா, ஒரு நாடு, ஒரு மொழி என்ற கொள்கையுடன் ஆட்சி செய்கிறது. நடந்து முடிந்த மக்களவை கூட்டத்தொடரில் 36 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர்.
அதில் குறிப்பாக மக்கள் கணக்கெடுப்பு, வங்கிக் கணக்கு, மக்களின் விவரங்கள் ஆகியவற்றை ஆதாருடன் ஒன்றிணைப்பது என்பது ஜனநாயக முறையையே மாற்றியமைக்கும் முறையில் இருக்கிறது. இப்போது ஒரு நாடு, ஒரு தேர்தல் என்ற முறைக்கு மத்திய அரசு வந்துள்ளது. அப்படியென்றால் தேர்தல் ஆணையத்தின் வேலை கேள்விக்குறியாகிறது.
மோடி சர்வாதிகார முறை ஆட்சியை கையாள்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அதிபர் முறைக்கு இந்தியாவை கொண்டு செல்லும் நோக்கில் மோடி செயல்படுகிறார்.
அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சாசனம், காந்தியின் அரசியல் நெறிமுறை, நேரு கண்ட குடியரசு ஆட்சி முறைகளை காலில் போட்டு மிதிக்கக்கூடிய வகையில் நரேந்திர மோடியின் ஆட்சி பயங்கரவாதத்துடன் செயல்படுகிறது’ என்றார்.