கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சென்னை கடற்கரையில் இருந்து குமரி கடற்கரைவரை இருந்த மீனவர் குப்பங்களின் தலைவர், நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வசித்து வந்தார். அந்த பரம்பரையில் வந்தவர் 63 நாயன்மார்களின் ஒருவர் அதிபத்தர்.
சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த இவர், தினமும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரியதும், சிறந்ததுமான மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விடுவது வழக்கம். ஒரு நாள் அதிபத்தர் வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் சிக்கியது. அந்த ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் ஒரே ஒரு மீன்மட்டும் வலையில் சிக்க, சிக்கும் ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது அன்பை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்தரின் வலையில் நவரத்தினமும், பொன்னும் பதித்த அதிசய மீனை சிக்க செய்தார் என்பது ஐதீகம்.
விலை மதிப்பற்ற அந்த மீனையும் அதிபத்தர் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான் பார்வதி சகிதம் வந்து அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி, நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா நேற்று(செப்.14) மாலை நடைபெற்றது.
வழக்கமாக நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று நம்பியார் நகரில் இருந்து அடியார்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துவரப்பட்டு, கடற்கரையில், அதிபத்தனார் பரம்பரையை சேர்ந்த ஒருவர் படகில் ஏறி தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக கடலில் வீசுவார்.
ஆனால் இந்தாண்டு கரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, நம்பியார் நகர் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் மட்டும் பங்கேற்று கடற்கரைக்கு செல்லமால் விழாவானது கோயில் உள்ளேயே எளிமையாக நடைபெற்றது.