மயிலாடுதுறை: சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்தக் குப்பைகள் நகராட்சி குப்பைக் கிடங்கில் பல டன் கணக்கில் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) அதிகாலை 4.30 மணி அளவில் இந்தக் குப்பையில் திடீரென தீப்பிடித்து குப்பை முழுவதும் எரிய தொடங்கியது.
இது குறித்து, தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகத்தாலும் குப்பை மலைபோல குவிந்து கிடப்பதால் தீயணைப்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.
தொடர்ந்து தீயணைப்பு வாகனம், நகராட்சி குடிநீர் வாகனம், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிவருகின்றனர். குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயால் அந்தப் பகுதியே புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்புத் துறை அலுவலரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - அமைச்சர் சேகர்பாபு