வேதாரண்யம் அருகே நேற்றைய முன்தினம் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும் வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 17 பேர் படுகாயமடைந்தனர். இச்சூழலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்டம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்ய வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் இன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீன்வளத் துறை அலுவலர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் இன்று நாகை துறைமுகத்தில் சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்ய சென்றனர்.
இதையறிந்த கீச்சாங்குப்பம் மீனவர்கள் காவல் துறையினரை தடுத்து நிறுத்தியும், மீனவ பெண்கள் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றியும் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை துறைமுகத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
பின்னர், மீனவ கிராம பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிக குதிரை திறன் கொண்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் நாகை காரைக்கால் மாவட்ட 64 கிராம மீனவர்களின் கூட்டத்தில் கூடி முடிவு எடுக்கப்படும் என்று அலுவலர்ளிடம் மீனவ பஞ்சாயத்தார்கள் உறுதியளித்தனர்.