நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் பணி விவசாய நிலங்களில் நடைபெற்றுவருகிறது. மாதானம் முதல் நறிமணம்வரை சுமார் நூறு கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
தற்போது காவிரியில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி, விவசாயம் முடியும்வரை பணியை நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர் அப்பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த ஓ.என்.ஜி.சி. அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். இது விவசாயிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த அலுவலர்களை, விவசாயிகள் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சம்பா பணியைத் தொடங்குவதற்கு முன்பு குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும்படி அந்நிறுவன அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிப்பதாக அவர்கள் தெரிவித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.