தமிழ்நாட்டில்நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி, பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தனி வட்டாட்சியர் இந்துமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.காரினுள் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்துதாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்துவந்தனர். மேலும்,நகைகளை எடுத்துவந்த திருவாடுதுறை ஆதீனத்தைச்சேர்ந்த சர்புநிஷா (53) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீர்காழி அருகே உள்ள வடக்கில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்த சார்பு நிஷா பாதுகாப்பிற்காக நகைகளை தன்னுடன் எடுத்துவந்தது தெரியவந்தது. ஆனால்,உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்த நகையை சீர்காழி வட்டாட்சியர் சபிதா தேவி, தனி வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணியிடம் ஒப்படைத்தனர்.