நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி, தரங்கம்பாடி மற்றும் மாணிக்கப்பங்கு ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மையங்களில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க அலுவலர் லலிதா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், "நிவர் புயல் இன்று மாலை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாகை, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயலால் ஒருவர்கூட பாதிக்கப்படாத வகையில் அனைவரையும் இன்று மாலைக்குள் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 97 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முகாம்களில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடரிலிருந்து பொதுமக்களை மீட்கும் வகையில் சீர்காழி, கொள்ளிடம் நாகப்பட்டினம் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 60 பேர் வந்து தயார் நிலையில் உள்ளனர். அதுமட்டுமன்றி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.