நாகையை அடுத்த செல்லூரில் செயல்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில், கல்லூரி திறந்து பல மாதங்கள் ஆகியுள்ள சூழலில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட தொலைதூரத்திலிருந்து கல்லூரிக்கு வருகின்ற ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தனியார் பேருந்தில் பணம் கொடுத்து பயணம் செய்து கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
பேருந்து பயண அட்டை இந்த மாதம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இதுவரை வழங்காத காரணத்தால், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் பயண அட்டையை விரைந்து வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பேருந்து பயண அட்டை இல்லாமல் கடும் சிரமத்தைச் சந்திப்பதாக கூறிய மாணவர்கள் அரசு மாணவர்களுக்கு விரைந்து இலவச பேருந்து பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
பின்னர், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரியின் அடையாள அட்டையை வைத்து மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து, மாணவர்களால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - முதலமைச்சர் பெருமிதம்!