நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பிபிடி என்னும் நெல் சாகுபடி செய்துள்ளனர். இன்னும் 10 நாள்களில் நெல் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி நெற்கதிர்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கியும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கியும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் இந்த மர்ம நோயால் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ரெங்கநாதன், விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு நெற்கதிர்களில் மர்ம நோய் தாக்குதலுக்குள்ளாகி நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். இதையடுத்து, வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் விரிவாக்க மைய அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' - அய்யாக்கண்ணு!