நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "வருகின்ற ஆற்ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கஜா புயலின்போது வேதாரண்யம் பகுதி மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடுக்கவில்லை. மாறாக சுவர் ஏறி குதித்து ஓடினார். கஜா புயலில் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்ப பெறப்படும்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி, துறைமுகம் கொண்டுவரப்படும் என்று பேசி உள்ளார். அந்த பகுதி மக்கள் துறைமுகத்தை எதிர்த்து வருகின்றனர். ஆதாரத்தோடு சொல்கிறேன் துறைமுகத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது.
மீனவர்களை பாதுகாப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அவர் பொய் மூட்டைகளை கொண்டுவந்து பேசி வருகிறார். என் மகள் வீட்டிலும் திமுகவினர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இரண்டு நாட்கள் ரெய்டு நடத்தி ஒன்றும் இல்லாமல் சென்றுவிட்டார்கள். இதனால் திமுகவிற்கு கூடுதலாக 25 சீட்டுகள் கிடைக்கும்.
திமுக பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது. மிசா சட்டத்தை பார்த்து ஓராண்டு கொடுமைகளை அனுபவித்து வந்தவன். தாராபுரத்தில் பேசிய மோடி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், தாராபுரம் அருகில்தான் பொள்ளாச்சி இருக்கிறது. அங்கு நடந்த கொடுமைகள் பிரதமருக்கு தெரியாதா?. மீனவர்களுக்கு பாதுகாப்பு தன்னுடைய அரசு என மோடி பேசுகிறார். பாஜக ஆட்சியின்போது துப்பாக்கி சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு, தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் உயிரிழப்பு என பல்வேறு தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தியுள்ளது.
சிறுபான்மை இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் அதிமுகவினர். நாடாளுமன்றத்தில் குடியிரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது. இவர்கள் ஆதரித்த காரணத்தால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம்தான் சிறுபான்மை மக்களை உரிமையற்றவர்களாக மாற்றுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம்.
தற்போது தேர்தல் வந்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார். பழனிசாமி எங்கு போனாலும் நான் ஒரு விவசாயி என்று பேசுகிறார். விவசாயி எனக்கு பிடிக்கும், ஆனால் போலி விவசாயி எனக்கு பிடிக்காது. பச்சை துண்டு போட்டால் விவசாயியா? உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண் சட்டத்தை ஆதரித்து இருப்பாரா?
டெல்லியில் போராடுபவர்களை புரோக்கர் என்று கூறி கொச்சைபடுத்திவருகிறார். 1,500 கோடி ரூபாய்க்கு தூர்வாரி கொள்ளை அடித்தவர் எடப்பாடி. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்.
மீனவ சமுதாய மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க முயற்சிப்போம். மீனவர்களுக்கு தடை கால நிவாரணம் 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மழைக்காலம் நிவாரணம் 6,000 ரூபாயாக உயர்த்தி தரப்படும். மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 உரிமை தொகை, மகளிர் பயணிக்க உள்ளூர் பேருந்து இலவசம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா நிவாரணம் 4,000 ரூபாய் வழங்கப்படும். கலைஞர் பிறந்த ஜூன் 3ஆம் தேதி கரோனா நிவாரணம் வழங்கப்படும். நாகையில் மீன் பதப்படுத்தும் நிலையம், வேளாங்கண்ணியில் மீன் உளர்த்தளம், நாகையில் கடல் உணவு மண்டலம் அமைக்கப்டும். அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும். நாகூர் சுற்றுலா நகரமாக மேம்படுத்தப்படும். இன்னும் பல்வேறு திட்டங்கள் நாகையில் நிறைவேற்றப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!