மயிலாடுதுறை: தமிழையும், சைவத்தையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் மயிலாடுதுறையில் உள்ளது. அதன் அருகிலேயே இவ்வாதீனத்திற்குச் சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியும் உள்ளது. அக்கல்லூரியின் பவள விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அக்கல்லூரியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி கலந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் அப்போதைய திமுக அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இக்கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 3,000 பேர் அமரும் வகையில் 80 அடி அகலமும் 220 அடி நீளமும் கலையரங்கம், 10லட்ச ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தைத் தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரியைச் சுவாமிகள் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் மற்றும் கல்லூரியின் பவள விழா மலரை வெளியிடுகிறார்.
முதலமைச்சரின் வருகை ஒட்டி கல்லூரி கலையரங்கத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் காவல் துறையினர் பார்வையிட்டுப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மச்சாரிய சுவாமிகள் முதலமைச்சர் வருகை தர உள்ளதால் கல்லூரி கலையரங்கத்தில் முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, பவளவிழா ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 24ஆம் தேதி கலந்து கொள்ள உள்ளதாகவும், தருமபுர ஆதீன கலைக்கல்லூரியில் புதிய கலையரங்கத்தைத் திறந்து வைத்து, தொலைக்காட்சி மற்றும் வானொலி பாவகத்தைத் திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் வெளியிட்டுச் சிறப்புரையாற்ற உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 25வது ஆதீனம் காலத்தில் தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 26வது சன்னிதானம் காலத்தில் கலைக்கல்லூரியாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதையும் கூறினார். மேலும் இந்த கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்றதையும் தெரிவித்தார்.
மேலும், இக்கல்லூரியின் பொன்விழாவில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அமைச்சர் கோசி.மணி பங்கேற்றதையும் தெரிவித்து, தற்போது 75வது பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது சிறப்புக்குறியது என்றும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: O.Panneerselvam: நாடாளுமன்ற தேர்தலில் போட்டி; ஓபிஎஸ் அறிவிப்பின் பின்னணி என்ன..?