மயிலாடுதுறை: ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், பெரியகருப்பன், ரகுபதி, தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ள பயிர்களின் புகைப்படங்களைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து தண்ணீரில் மூழ்கிய அழுகிய நிலையில் வேளாண் துறையினர் வைத்திருந்த சம்பா பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, விவசாயிகள் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஐ. பெரியசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ஏழாயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளுக்காக மழை பெய்த 36 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு, நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பயிர்களையும் கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு முறையாகத் தூர்வாரும் பணியை மேற்கொள்ளாததால், தற்போது மழைவெள்ள பாதிப்பிற்குத் தமிழ்நாடு மக்கள் உள்ளாகியுள்ளனர். ஆறுகள், குளங்கள் கடற்கரையில் உள்ள முகத்துவாரங்களை தூர் வாராமல், அதிமுக அரசு முறையாகத் தூர்வாரிவிட்டதாக விளம்பரத்தை மட்டும் தேடிக் கொண்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்களுடன் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் அண்ணாதுரை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்பி ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை