நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புரெவி புயல் கனமழையால், 60 ஆயிரம் ஹெக்டேரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை தாலுக்கா மொழையூர் ஊராட்சியில் அய்யாவையனாற்றின் கரைப்பகுதியில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை பார்வையிட்ட அவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் ஆற்காடு, ராதாநல்லூர் கிராமங்களில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களையும் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மயிலாடுதுறை பகுதிகளில் நெற்பயிர்கள், வாழை போன்றவை கடுமையாக சேதமடைந்துள்ளன. தண்ணீர் வடிய வழியில்லாததால் பயிர்கள் கூடுதலாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். விவசாயிகளின் இந்த கருத்தினை முதலமைச்சருக்கு தெரியப்படுத்துவோம். பாதிக்கப்பட்ட பயிர்கள் வேளாண்துறையால் கணக்கெடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு ஆவண செய்யும்.
அரசின் சிறந்த நடவடிக்கை, மருத்துவத்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக உலகளவில் 2, 3 ஆவது அலை பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, தமிழகத்தில் இறங்குமுகத்தில் உள்ளது. தற்போதைய கரோனா பரவல் விகிதம் 2.8% ஆக உள்ளது. புயல், வெள்ளம் போன்ற சவாலான காலகட்டத்திலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம்கூட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன “ என்றார்.
கரும்பு விவசாயிகள் நெல் விவசாயத்துக்கு மாறியதால் வெள்ள பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு, மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதே காரணம் என்ற கேள்விக்கு, இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்!