மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில் உள்ள தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் மிக விரைவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நேற்று அது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் தில்லையாடி வள்ளியம்மை திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் தில்லையாடி அருணாசலக்க விராயர், தியாகி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு புத்தகங்களை பரிசாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து, தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், "செய்தித்துறை பராமரிப்பில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் கருணாநிதியில் திறக்கப்பட்டு 1971இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு இருந்த ஆபத்தை துடைக்கின்ற வகையில் உயிர் தியாகம் செய்தவர், வள்ளியம்மை.
இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்
அவரின் நினைவைப் போற்றும் வகையில் தில்லையாடியில் கட்டப்பட்ட இந்த மணிமண்டபம் பல ஆண்டுகளாகியுள்ளதால் பராமரிப்பு பணி செய்யப்பட உள்ளது. சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தில்லையாடி நினைவு மண்டபம் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும், தமிழிசை மூவருள் ஒருவரான அருணாச்சலக்கவிராயர் பிறந்த ஊரான தில்லையாடியில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
ஆனால், தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைப்பதில் நாட்டம் செலுத்துவதை விட மக்களுக்குப் பயன்படும் வகையிலான சமுதாய கூடங்கள், அரங்கங்கள் அமைப்பது, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக உள்ளது.
அந்த வகையில் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து சீரமைப்புப் பணிகளுக்கு பின்னர் ஆலோசனை மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து, தரங்கம்பாடியில் கடற்கரையில் உள்ள சீகன்பால்க் சிலைக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த கேள்விக்கு, “தற்போது இல்லை போதிய நிதி ஆதாரத்தின் இடம் தராத காரணத்தால் கடந்த ஆண்டு அதை செய்ய முடியவில்லை எதிர்காலத்தில் செய்யப்படும்” என தெரிவித்தார். இந்த பேட்டியின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.