மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (நவ. 23) சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக, கோயில் வாசலில் தமிழ்நாடு எம்.கே.டி பேரவை சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, விஸ்கர்ம சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய எம்.கே.டி. தியாகராஜ பாகவதர் வாழ்ந்து மறைந்து அடக்கம் செய்யப்பட்ட திருச்சியின் மையப் பகுதியில் அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சி விஸ்கர்ம சமுதாயத்திற்கு சிறந்த மரியாதையை அளித்துள்ளது. அதிமுகவினர் கோயில், பள்ளிவாசல், சர்ச் ஆகிய மத வழிபாட்டு தலங்களுக்கு உண்மையான பக்தியுடன் சொல்கிறோம். திமுகவினர் தேர்தலுக்காக ஆன்மீகத் தலங்களுக்குச் செல்கின்றனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்று திருநீறு பூசிக் கொள்கிறார். இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதையே தொழிலாகக் கொண்ட கட்சி திமுக. இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மடாதிபதியை சந்திக்கிறார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவை தோற்கடித்து 3வது முறையாக ஆண்ட கட்சி என்ற பெருமையை அதிமுக பெரும். திமுகவுக்கு எழுச்சி எல்லாம் கிடையாது வீழ்ச்சி மட்டுமே உள்ளது என்றார்.