மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி, பேரூராட்சி பொதுநிதியிலிருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்துவைத்தார். மேலும் நாகை மாவட்டத்திற்கு ஐந்து 108 ஆம்புலன்ஸ் இலவச சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விரைவில் நெல்லுக்கு கூடுதல் விலையை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார். எனவே விவசாயிகள் சில நாள்கள் மட்டும் பொறுத்திருக்க வேண்டும்.
வேளாண் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நானும் ஒரு விவசாயி என்ற முறையில் வேளாண் திருத்த மசோதாவில் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்று தேடித் தேடி பார்த்துவிட்டேன். அதில் எந்த பாதிப்பும் இல்லை.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு சென்று விற்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடிவந்தனர். அதுதான் தற்போது நிறைவேறியுள்ளது.
இதில் எந்தவிதமான பிரச்னையும் இருப்பதாக நாங்கள் அறியவில்லை. விவசாயிகளின் நெல், பருத்தி உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு நிர்ணயித்துள்ளபோது அதைவிட அதிக விலையை அளித்தால் மட்டுமே விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்தினரிடம் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வார்கள்.
வேளாண்மை சட்டத்தில் தவறு உள்ளதாக குற்றஞ்சாட்டும் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், எந்த இடத்தில் தவறு இருக்கிறது, எப்படி நஷ்டம் ஏற்படப்போகிறது என்பதைச் சுட்டிகாட்ட வேண்டும். அதைவிட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவது சரியல்ல'' என்றார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் - அக்டோபரில் அமல்படுத்த முதலமைச்சர் ஆலோசனை!