நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் அரசு விதைப்பண்ணை அலுவலக கட்டடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று(அக் .3) திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு விதைப்பண்ணை அலுவலக கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (அக்.3) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கட்டத்தை திறந்து வைத்து அதிக மகசூல் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குழி நாற்று நடவு முறையை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், “இந்தப் பருவத்துக்கான நெல் கொள்முதல் நிலையம் இன்று(அக்.3) அல்லது நாளை(அக்.4) தொடங்கப்படும்.
கடந்த ஆண்டை விட தற்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.53 அதிகமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, மோட்டோ ரக நெல் குறைந்தபட்சம் கிலோ ரூபாய் 19.18 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஏற்கனவே உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களும் இந்த ஆண்டும் செயல்படும், தேவைப்பட்டால் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சராசரியாக நெல் எடுக்கப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத தலைவரின் பேச்சுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை” என்றார்.
மேலும், “தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு 2019 - 20 ஆண்டுக்கு ரூ.10,553 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இயற்கை இடர்பாடுகள், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டபோதும் கடந்த நான்காண்டுகளாக சிறந்த வேளாண் உற்பத்திக்கான விருதினை தமிழ்நாடு பெற்று வருகிறது.
குறுகிய நாளில் வளரும் குறுவை பயிர்கள் பலத்த காற்று அடிக்கையில் சாய்வது இயல்பு. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய அரசு முயற்சி எடுக்கும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்காக மெட்ரோ ரயில் தொடக்கம்!