மயிலாடுதுறையை நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து தனிமாவட்டமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதற்கான இடத்தை தருமை ஆதீனம் அளிப்பதாக உறுதியளித்தது.
தனிமாவட்ட உருவாக்கத்திற்கான சிறப்பு அலுவலராக லலிதாவும், எஸ்.பி.ஸ்ரீநாதாவும் நியமிக்கப்பட்டு எல்லை வரையறை பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர், சிறப்பு அலுவலர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அலுவலர்கள் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானத்தை ஆதீனத்தில் சந்தித்து அருளாசி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் இடம் அளிப்பதாக ஒப்புதல் அளித்ததால் அதற்கான தடையில்லா சான்று பெறுவது தொடர்பாக குருமகா சன்னிதானத்தை சந்தித்து பேசியுள்ளோம். நவமியாக இருப்பதால் நல்ல நாளில் என்ஓசி அளிப்பதாக குருமகா சன்னிதானம் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை தனிமாவட்டமாக முழு அதிகாரத்தோடு செயல்பட அடுத்த மாதம் முதல் தொடங்கும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுவார். மயிலாடுதுறை புதிய பேருந்துநிலையம் நகராட்சி அமைக்க வேண்டும். நிதி ஆதாரம் இல்லை என்பதால் அரசின் முயற்சியால் தனியார் பங்களிப்புடன் செயல்பட இருக்கிறது. டெண்டர் எடுக்க தனியார் ஏன் விரும்பவில்லை என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கும்'' என்றார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பயிற்சி: மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு