மயிலாடுதுறை மாவட்டத்தில் வருடந்தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி, தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராணம் கூறுவதால், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் இம்முறை கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு மக்கள் கூடும் திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால், சிவாலயங்களிலிருந்து சுவாமிகள் காவிரிக் கரைக்கு செல்லாமல் அஸ்திரதேவர் மட்டும் எடுத்துச்செல்லப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயூர நாதர் ஆலயத்தில் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம் திருவிழா தொடங்கியது. இதையடுத்து 3ஆம் நாள் திருவிழாவான இன்று(நவ.08) ஆலயத்தில் சுவாமி அம்பாள் வெள்ளி ரதத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் மர ரதத்திலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் படி கூட்டம் இல்லாமல் ஆலய பிரகாரங்களை சுவாமிகள் சுற்றி வந்தது. பின்னர் அஸ்திரதேவர் துலா கட்ட காவிரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாக் கூட்டங்களுக்கு உள்ள தடையால் புகழ் வாய்ந்த துலா உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சிவாலயங்களான மயூரநாதர், வதான்யேஸ்வர், ஐயாரப்பர் மற்றும் பரிமள ரங்கநாதர் ஆலயத்தின் தேர் ஓட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி துலா உற்சவத்தின் சிறப்பு வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.