மயிலாடுத்துறை: சீர்காழி அருகே ஓதவந்தான்குடி நியாயவிலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசி வண்டுகளுடனும் புழுக்களுடனும் இருந்ததால் சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தரமான அரிசி வழங்க அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் ஓதவந்தான்குடி கிராமத்தில் அரசு நியாயவிலைக்கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் கிராமத்தைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசின் குடிமைப் பொருட்களைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான குடிமைப் பொருட்கள் இதுவரை வழங்கப்படாத நிலையில் விடுமுறை தினமான இன்று கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. அப்பொழுது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி வண்டுகளுடனும் பழுப்பு நிறத்தில் புழுக்களுடனும் இருந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரிசியைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே தங்களுக்கு வண்டுகள் வைத்த அரிசியை வழங்குவதாகவும், இதனைச் சமைத்து உண்பதற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் கொட்டியும் கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
கிராமத்தைச் சேர்ந்த அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அரசு வழங்கும் அரிசியையே நம்பியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் தங்களால் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாகச் சாப்பிட முடியாத அவல நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.
எனவே, வரும் காலங்களிலாவது தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:யானைகள் வேட்டை, தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது - சிபிஐ அறிக்கை தாக்கல்