நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 27 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 17 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ், பாமக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் திமுக ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை கைப்பற்றுவது உறுதியானது.
மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தியின் மனைவி காமாட்சி ஒன்றிய கவுன்சிலராக பொதுப்பிரிவில் வெற்றி பெற்றுள்ளதால் காமாட்சிக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் ஒன்றிய கவுன்சிலராக தனிப் பிரிவில் வெற்றிபெற்ற தனது மனைவி ஸ்ரீமதிக்கு தலைவர் பதவி கேட்டு பிரச்னையை தொடங்கியதில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செயலாளர் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் திமுக சார்பில் பொதுப் பிரிவைச் சேர்ந்த காமாட்சி, தனிப்பிரிவைச் சேர்ந்த ஸ்ரீமதி ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவு கவுன்சிலர்களை ரகசிய இடத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று மறைமுகதேர்தல் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
இதனால் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். செல்போன், பேனா உள்ளிட்ட எந்த பொருள்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே அதிமுகவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் என்று அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: