தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது, தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் 11 எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதனால், நாகப்பட்டினத்தில் பணிபுரிபவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நாகப்பட்டினத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், மருத்துவப் பணிகளுக்காக செல்பவர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறையிலிருந்து இரண்டு பேருந்துகளை இயக்கியது. இன்று காலை 8 மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தில், அலுவலக பணிகளுக்காக செல்பவர்கள், தங்களது அடையாள அட்டையை காண்பித்த பின்பு காவல் துறையினர் அவர்களை சோதனை செய்து அனுமதித்தனர்.
அதேபோல், பேருந்தில் அனைவரும் முகக்கவசம் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 5 மணிக்கு இந்தப் பேருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஒரு கையில் 'செல்போன்'... ஒரு கையில் 'ஸ்டீயரிங்' - 15 கி.மீ. அசால்டாக பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்