மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணை தலைவரும், இயற்கை ஆர்வலருமான கி.காசிராமன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன், தான் வளர்க்கும் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் ஊர்வலமாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், அவர் வளர்க்கும் குதிரையையும் வண்டியில் பூட்டி ஊர்வலமாக அழைத்து வந்தார். வேட்பாளருடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் முழக்கமிட்டபடி இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
முன்னதாக, அவர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாசலில் அமைந்துள்ள தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், அரசு பேருந்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ரயில்வேயை தனியார்மயமாக்க திட்டமில்லை - பியூஷ் கோயல் உறுதி