மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தேவாரப்பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் தட்சனின் யாகத்தில் கலந்துகொண்ட குற்றம் நீங்க உமையவள் மயில் உருவம் கொண்டு சிவபெருமானைப் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
இத்தகைய சிறப்புப் பெற்ற மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலின் திருப்பணிகள் நேற்று (நவம்பர் 21) தொடங்கப்பட்டன. அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோ பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு கோயில் கொடிமரத்து மண்டபத்தில், யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோயிலின் ஈசானிய மூலையில் திருப்பணிக்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டினார். இதில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
பாலஸ்தாபன பூஜைகளைச் சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமி நாத சிவாச்சாரியார் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் ஓதி செய்துவைத்தனர். விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க:அதிமுக போல் திமுக அரசும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஜெயக்குமார்