நாகை மாவட்டத்தைப் பிரித்து 38ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், “ஒருங்கிணைந்த நாகப்பட்டின மாவட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து மாவட்டத் தலைநகரான நாகைக்குச் செல்ல, புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் வழியாகச் சென்றுவரவேண்டிய அவலநிலை தற்போது மாறியுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இரண்டு பகுதிகளையும் எனது இரண்டு கண்களாகவே பார்க்கிறேன். எப்போதும் இரண்டையும் வேறுபடுத்தி பார்த்ததில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் இடவசதி இருந்தால் அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, தொழிற்சாலைகள் ஆகியனவற்றை அமைத்துத் தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரும் எதிர்பாராத வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கான நிர்வாக அலுவலகங்களை அமைப்பதற்கான நிதியை அறிவித்து, விரைவில் முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார்.
ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடியைத் தாண்டி, எந்தத் துறையிலும் ஊதியம் பிடித்தம் செய்யாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதேபோல், கரோனா தொற்றுக்கு சிறப்பாகச் சிகிச்சை வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.
மயிலாடுதுறையில் புதை சாக்கடைத் திட்டம் விரைவில் சீரமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.