மயிலாடுதுறை: மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலையை எதிர்க்கும், ஆதரிக்கும் மீனவர்களிடையே பிரச்னை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள், தடையை மீறி சுருக்குமடி வலையுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதனைத் தடுக்க தரங்கம்பாடி தலைமையிலான சுருக்குமடி வலை எதிர்ப்பு மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று பறிக்க முயன்றனர். இந்தப் பிரச்னையின்போது திருமுல்லைவாசல் விசைப்படகு வானகிரி பைபர் படகு மீது மோதியதில், பைபர் படகு கடுமையாக சேதமடைந்தது. இதில், மூன்று மீனவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசைப்படகு பறிமுதல்
இதையடுத்து, வானகிரி படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, மீனவ கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு ஒன்றை முன்னதாக அளித்தனர்.
அந்த மனுவில், "பைபர் படகு மீது மோதிய விசைப்படகை பறிமுதல் செய்ய வேண்டும், காயமடைந்த மீனவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும், அரசால் தடைசெய்யப்பட்ட வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட விசைப்படகுகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதி தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, தவறினால் 21ஆம் தேதி நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, பைபர் படகை மோதிய திருமுல்லைவாசல் விசைப்படகு, அதன் சுருக்குமடி வலையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலை நிறுத்தம் வாபஸ்
இந்நிலையில், சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான 20 மீனவப் பஞ்சாயத்தார்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை நேற்று (ஆக. 21) சந்தித்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட வலையை கொண்டு மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்றும், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு மீன்பிடிக்க மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தரங்கம்பாடி தலைமையிலான 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் இன்று (ஆக.22) முதல் சிறுதொழில் செய்ய கடலுக்குச் செல்வதாக கூறினர். இதன் மூலம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா?