தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். இதையடுத்து மயிலாடுதுறைக்கு சிறப்பு அலுவலர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 45 நாள்கள் கடந்தும் புதிய மாவட்ட பணிகள் தாமதம் ஏற்படுவதாகவும், அரசு திட்டமிட்டே காலதாமதம் செய்வதாகவும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையில் வழக்கறிஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேயோன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது. பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டால் அதன் பின்னர் எந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று சட்டம் உள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அறிக்கையே இதுவரை தமிழ்நாடு அரசுக்கு சென்று சேரவில்லை. அதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இதுவரை கையொப்பம் இடவில்லை.
தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லாவிடில் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு சட்ட போராட்டம் நடத்துவதோடு மட்டுமின்றி மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்” என்றார்.