மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.7) மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், "மயிலாடுதுறையில் கடந்த ஓரிரு நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே தொற்று பாதிப்பு 500ஐ எட்டும் என அஞ்சப்படுகிறது.
மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகள், சீர்காழி அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சை பெற மாவட்டத்தில் ஆறு இடங்களில் தலா 250 படுக்கைகளுடன் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 24 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை.
தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுவது தடுப்பூசி மட்டும் தான். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு, கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டில் ஓரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு!