மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தத்தங்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பழனிகுருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் மெயின் ரோட்டில் கொள்ளம்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) வழக்கம்போல் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இருவரும் மாலை 5 மணி வரையில் பட்டறையில் வேலை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
அவர்களுக்கு அருகில் இரண்டு அரசு டாஸ்மாக் மது பாட்டில்களும் இருந்துள்ளது. அதிலும், ஒரு பாட்டிலில் பாதி மதுவும், மற்றொரு பாட்டில் பிரிக்காமல் அப்படியே இருந்துள்ளது. இதனிடையே, மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளம்பட்டறையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது என்றும், மேலும் இருவருக்கும் எந்த வித நோய்களும் இல்லை என்றும், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்ற நிலையில் அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்ஜீவ்குமார் தலைமையிலான காவல் துறையினர், கொள்ளம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உயிரிழந்த இருவரது உடல்களையும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை தஞ்சாவூர் தடயவியல் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், “டாஸ்மாக் மது பாட்டிலில் சயனைடு கலந்துள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 பாட்டில்களில் ஒரு பாட்டில் காலியாக இருந்தது. மற்றொரு திறக்கப்படாத மதுபாட்டிலை ஆய்வு செய்ததில், அதில் சயனைடு கலந்ததற்கான பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது. எனவே, இவர்கள் இருவரும் டாஸ்மாக் மதுபானத்தால் உயிரிழக்கவில்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “உசாரய்யா உசாரு”... மதுரையில் உலா வரும் 'குரங்கு குல்லா' திருடர்கள்!