மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, ”தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983, 2020 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை (4) நாள். 25.03.2000இன்படி,
240 குதிரைத் திறனுக்கு (Horse power) மேற்பட்ட அதிவேக குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகினைக் கொண்டும், சுருக்குமடி, சுத்துவலை (மாப்புவலை) 40 மி மீட்டருக்கு மேற்பட்ட கண்ணி அளவு கொண்ட தூர்மடி வலை கொண்டும் மீன்பிடிப்பில் ஈடுபடுவது, ஐந்து நாட்டுக்கல் கடல்மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க வேண்டிய நேரம்
மேலும், மீன்பிடி விசைப் படகுகள் தங்கு தளத்திலிருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும். இவ்விதியை மீறும்பட்சத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவை பறிமுதல்செய்யப்படும்.
அத்துடன் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்செய்து ஏலமிடப்படும். மேலும், இவ்வகையான மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீன்வளம், மீனவர் நலத் துறை வாயிலாக அவர்கள் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குப் பிறகு உதகை ரயில் சேவை தொடக்கம்