மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் ஜூன் 12ஆம் தேதி முதல் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பிலிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்துக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், வண்டிக்காரத் தெருவில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளும், நடைபாதைக்கடைகள் அதிகரித்ததால் இன்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காவல் ஆய்வாளர் டில்லி பாபு, காவல்துறையினர் பாதுகாப்புடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, வண்டிக்காரத் தெருவரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, நடைபாதை வியாபாரிகளுள் ஒருவர், பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் மீது எடைக்கல்லை வீசினார். அதில் சிறப்பு பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன் என்பவர் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
பின்னர், அடிபட்ட காவலரை சக காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தொடர்ந்து வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு வியாபாரிகளை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் சேமித்து காவலரை தாக்கிய நபர் யார் எனக் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.