நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேவுள்ள மேலாநல்லூர் கிராமத்தில் இயங்கிவந்த பள்ளியில் இட நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக புதிய கட்டடம் கட்டுவதற்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் ரூ. 1.47 கோடி ஒதுக்கப்பட்டது. இக்கட்டடம் கட்டுவதற்கு மேலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குரு ராமலிங்கம் என்பவர், தனது சொந்த இடமான அரை ஏக்கர் நிலத்தை வழங்கினார்.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கியதும், இரண்டாம் தள கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் கட்டுமான பணி நடக்காததால், நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி ராமலிங்கம் விரக்தி அடைந்தார். மேலும், கட்டட பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி கிராமவாசிகள் 250 பேர் கையெழுத்திட்ட மனுவை மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணியிடம் வழங்கினார்.
இதனிடையே ஏழை மாணவர்களின் நலனுக்காக தனது சொந்த விளைநிலத்தையே விவசாயி தானமாக வழங்கியிருந்தும், கட்டடப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.