மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ. பழனிச்சாமியை ஆதரித்து மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் ஏமாற மாட்டார்கள்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்ப் பரப்புரைகள் மூலமாகவும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தி மனுக்களைப் பெறுவதன் மூலமாகவும் மக்களை ஏமாற்றி முதலமைச்சராகிவிடலாம் எனக் கனவு காண்கிறார். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலைப்போல் இந்தத் தேர்தலில் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
குறைகளுக்குத் தீர்வு காண உதவி மையம்
பொதுமக்கள் அரசை உடனடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் 1100 என்ற உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் சம்பந்தப்பட்ட துறையினரைத் தொடர்புகொண்டு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தெரிவித்தால் அவை உடனடியாகச் சரிசெய்யப்படும்.
இதன்மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் இதுவரை தங்களது குறைகளுக்குத் தீர்வு பெற்றுள்ளனர். உழவன் செயலி மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகண்டு, விஞ்ஞான முறைப்படி அரசு செயல்படுகிறது.
இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி மதிப்பீட்டில் அரசு கதவணை அமைத்துள்ளது.
மயிலாடுதுறை ஸ்டாலினுக்காக அல்ல
மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை.
அதனால் அவர் தற்போதுவரை நாகை வடக்கு மாவட்டம் என்றே கூறிவருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் ஸ்டாலினுக்காக உருவாக்கப்படவில்லை. மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உள் இடஒதுக்கீடு
இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பதற்காக 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் கடந்தாண்டு ஆறாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நிகழாண்டு 435ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டால் அடுத்த ஆண்டு 600 அரசுப்பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பார்கள்.
நீட் தேர்வை கொண்டுவந்த திமுக - காங்கிரஸ்
2010ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சி செய்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்பதை மறந்துவிட்டு, நீட் தேர்வைத் தடுக்க தமிழ்நாடு அரசு எதையும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார்.
நீட் தேர்வை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், வேறுவழியின்றி தமிழ்நாடு அரசு அதனைச் செயல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.
மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் சீர்செய்யப்படும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மயிலாடுதுறை பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
நூறு ஆண்டுகள் ஆனாலும்...
முதலமைச்சராகும் ஸ்டாலினின் கனவு நனவாகாது. நூறு நாளில் முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னார். நூறாண்டுகள் ஆனாலும் அவரால் முதலமைச்சர் ஆக முடியாது.
அதிமுக அரசு நூறாண்டுகள் இந்த மண்ணில் ஆள வேண்டும் என ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
திண்ணையில் பெட்சீட் போட்டு உட்கார்ந்து 10 பேரிடம் கோரிக்கை மனு வாங்கி பெட்டியில் போட்டுக்கொள்கிறார். ஆனால் அவர் அந்தப் பெட்டியையே திறக்க முடியாது. இதை அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராகவோ, துணை முதலமைச்சராகவே இருந்தபோது ஏன் செய்யவில்லை.
இளைஞர் சமுதாயம் யூ-ட்யூப், ட்விட்டர் என ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் மனு வாங்கி ஏமாற்றும் வேலை செல்லுபடியாகாது
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: வேட்புமனு தாக்கலில் மாஸ் காட்டிய திமுக வேட்பாளர்!