நாகப்பட்டினம்: தருமபுரம் ஆதீனத்தால் கட்டப்பட்டு நகராட்சி பராமரிப்பில் விடப்பட்ட இலவச மருத்துவமனை பழுதடைந்ததால் மருத்துவமனையை சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வடக்கு வீதி, சியாமளாதேவி அம்மன் கோயில் அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் இடத்தில் தருமபுரம் ஆதீனத்தால் 1951ஆம் ஆண்டு இலவச மருத்துவ விடுதி கட்டப்பட்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பி. எஸ். குமாரசாமி ராஜாவால் திறந்து வைக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த மருத்துவ விடுதி, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அருகிலேயே குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையமும் உள்ளது. இந்நிலையில் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டடம் பழுதடைந்ததால் கூறைநாட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு மகப்பேறு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது.
பழுதடைந்த மகப்பேறு மருத்துவமனையை புனரமைக்காமல், நகராட்சி நிர்வாகம் அருகிலேயே திடக்கழிவு மேலாண்மை கட்டடம் கட்டப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சியாமளாதேவி கோயில் கும்பாபிஷேகத்திற்காக கோயில் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திடீரென்று ஆதீனத்தால் 1951ஆம் ஆண்டு இலவசமாக கட்டிகொடுக்கப்பட்டு தற்போது இடியும் நிலையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையையும், 1951ஆம் ஆண்டு வைக்கப்பட்ட கல்வெட்டுகளையும் பார்வையிட்டார்.
அப்போது பொதுமக்கள், இலவச சிகிச்சைக்காக ஆதீனத்தால் கட்டிகொடுக்கப்பட்ட மருத்துவமனை பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு வைத்துள்ளதாகவும், நகராட்சியிடமிருந்து இடத்தை திரும்ப பெற்று இலவச மருத்துவமனையை மீண்டும் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சேறும் சகதியுமாக உள்ள சாலைகள்: நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்!