கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. முன்கூட்டியே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் சமூக விலகலை கடைப்பிடித்து திருமணத்தை நடத்துவதற்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு அதிகளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 20க்கும் மேற்பட்டோர் கூட்டமாக இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திருமண மண்டபத்தை பூட்டி அலுவலர்கள் சீல் வைத்து சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா: நாகை ஆஞ்சநேயருக்கு நடத்தப்பட்ட யாகம்