மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், இரவில் வேலை நேரம் முடிந்தபின் பூட்டப்பட்டாலும், அதன் அருகில் செயல்படும் பார்களில் சட்டவிரோதமாக இரவு முழுவதும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (23) என்ற இளைஞர், தங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் விழாவுக்காக மொத்தமாக மது வாங்க, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று நள்ளிரவில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பாரில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி என்பவர், அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. மொத்தமாக வாங்குவதால் விலை குறைத்துத் தருமாறு ஜீவானந்தம் கேட்டுள்ளார். இதற்கு தமிழ்மணி மறுப்புத்தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜீவானந்தம், தங்கள் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை உடன் அழைத்து வந்து தமிழ்மணியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவானந்தத்தின் நெஞ்சில் குத்தியதில் ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார் ஜீவானந்தத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தமிழ்மணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அத்துமீறி நுழைந்த படகில் போதைப் பொருள்; ஈரானியர்கள் 11 பேரிடம் விசாரணை!