நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீரங்குடி கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கீரங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் உடைப்பால், பெருமளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தன.
மீதமுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பித்து அறுவடைக்கு தயாராக உள்ளன. சென்ற முறை வடமாநிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கோதுமை பயிர்களை கடித்து நாசம் செய்தது போல், கீரங்குடி கிராமத்திலும் வெட்டுக்கிளிகள் அட்டூழியம் செய்து வருகின்றன. வெட்டுக்கிளிகளின் பெருக்கம் அதிகமாகி, வயலிலேயே மடிவதால் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் அனைத்தும் நாசமாவதைக் கண்டு விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து கொள்ளிடம் வேளாண்துறை உதவி இயக்குனருக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே மழைக்காலத்தில் அறிவித்த நிவாரணமே அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை. இப்போது வெட்டுக்கிளிகளும் பயிரை நாசமாக்கி வருவதால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லுக்குப் பிறகு பயிரிட இருக்கும் பருத்தி, உளூந்து, பயிர்களை பாதிக்காத வகையில் வெட்டுக்கிளிகளை உடனடியாக அழிக்கவும், பிற கிராமங்களுக்கு பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: தேமுதிக விலகல் முதல் ஸ்டாலினின் தடுப்பூசிவரை - இன்றைய தேர்தல் சரவெடிகள்