கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கிக்கிடக்கின்றன. தற்போது மத்திய அரசு விவசாயத் தொழில்களுக்கு விதிவிலக்கு அளித்திருந்தாலும், கரோனா நோய்த்தொற்று அச்சத்தால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழலே நிலவி வருகிறது.
நாகை மாவட்டத்தில் நெல், கறும்பு, வேர்க்கடலை, முந்திரி உள்ளிட்டவை பிரதான விவசாய தொழிலாக உள்ளது. குறிப்பாக கடலோர மணற்பாங்கான பகுதிகளின் புன்செய் நிலத்தில் விளையும் பணப்பயிர் முந்திரி ஆகும்.
ஒருமுறை பயிரிட்டால் ஆண்டாண்டுகளுக்கும் பலன் தரும் முந்திரி, ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்த்து மகசூல் தரக்கூடியது. தற்போது நாகை மாவட்டம் பிரதாபராமபுரம், பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஆட்கள் இல்லாமல் முந்திரி பழங்கள் மண்ணில் விழுந்து பாழாகி வருவதாகவும், கடன்பட்டு உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்த தொகை கூட தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு தங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.