நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா, தாளடி நெல் கொள்முதல் செய்வதற்காக 284 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த மாதம் 20ஆம் தேதியில் இருந்து முழுவீச்சில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த வாரம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், நாகை மாவட்டத்தில் மட்டும் 36 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்றனர்.
இதனால் மயிலாடுதுறை கோட்டத்தில் நெல் கொள்முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் நாள் கணக்கில் காத்திருந்தும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விவசாயிகளிடம் காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நத்தம் அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு