நாகை மாவட்டம் சீர்காழியில் கழுமலை ஆற்றங்கரை மற்றும் அதன் அருகே உள்ள சுடுகாடுகளில் பலர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து 'பாண்டி ஐஸ்' என்று பெயரிடப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். விலை குறைவான இந்த சாராயத்தை கூலித்தொழில் செய்யும் பலர் வாங்கி குடிக்கின்றனர். இதனால் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதுடன், சிலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனை வெளியில் சொல்ல முடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். போலீசார் சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அவர்கள் சட்டம் தெரிந்த சிலரை வைத்து ஒரு சில நாட்களிலேயே வெளியில் வந்து மீண்டும் சாராய வியாபாரத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில் மேல மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவிக்குமார்(43) என்பவர் திருத்தாளமுடையார் கோயில் அருகே விற்பனை செய்யப்பட்ட பாண்டி சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்து குடித்துள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. சில நேரத்தில் ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த ரவிக்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.